அதென்ன அசைவ பால்? அமெரிக்கா கொடுக்கும் பிரஷர்.. திட்டவட்டமாக மறுக்கும் இந்தியா.. பின்னணி

அதென்ன அசைவ பால்? அமெரிக்கா கொடுக்கும் பிரஷர்.. திட்டவட்டமாக மறுக்கும் இந்தியா.. பின்னணி
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கடந்த வாரமே இறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்டது...

டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கடந்த வாரமே இறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது தாமதம் ஆகிக்கொண்டோ போகிறது. இதற்கிடையே இது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அசைவப் பால் விவகாரம் காரணமாகவே இந்த ஒப்பந்தத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதென்ன அசைவப் பால் என்ற கேள்வி வரலாம். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்....

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீண்டும் ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்குள் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியில் பல்வேறு உலக நாடுகள் இறங்கியுள்ளன. குறிப்பாக இந்திய அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்காவில் தங்கி வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர்....

பேச்சுவார்த்தையில் சிக்கல்

இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாயம் மற்றும் பால் இறக்குமதி தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருமித்த கருத்தை அடைய முடியாததால் பேச்சுவார்த்தை போய்க் கொண்டே இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கப் பால் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா தயங்குவதாகக் கூறப்படுகிறது. சைவ பால் என்பதை உறுதியளிக்கும் சான்றிதழ் தேவை என்றும் இந்தியா கூறுவதாகத் தெரிகிறது. சைவ பால் என்ற சான்றிதழ் என்றால் அப்போது அசைவப் பால் என இருக்கிறதா என்ற கேள்வி உங்களுக்கு வரும் இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்..

இந்தியாவின் கோரிக்கை

மாமிசம் உள்ளிட்ட விலங்கு சார்ந்த பொருட்கள் தீவனமாகத் தரப்படாத பசுக்களிடமிருந்து பெறும் பாலை மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் இதை உறுதி செய்யக் கடுமையான சான்றிதழ் முறையை இந்தியா வலியுறுத்தி வருகிறது. மத நம்பிக்கைகளால் இதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இதுதான் ரெட் லைன் என்றும் இதை நிச்சயம் தாண்ட முடியாது என்றும் இந்தியா அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

உணவு இறக்குமதிக்கான கால்நடை மருத்துவச் சான்றிதழை இந்தியாவின் கால்நடை பராமரிப்புத் துறை கட்டாயமாக்கியுள்ளது. அதில் இறைச்சி எந்தவொரு அசைவ உணவையும் எப்போதும் தீவனமாக வழங்கப்பட்டு இருக்கக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது.. முன்பே இந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லாத வணிகத் தடைகளை உருவாக்குவதாக அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது....

அதென்ன அசைவப் பால்

அமெரிக்காவில் மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் விலங்கு பொருட்களும் இருக்கிறது. இதுகுறித்து 2004ம் ஆண்டு ஒரு விரிவான அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் பன்றிகள், மீன், கோழி, குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளின் மாமிசம் இருக்கும் தீவனத்தைப் பசுக்கள் உண்ண அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுக்குத் தேவைப்படும் புரதத்திற்காகப் பன்றி மற்றும் குதிரை ரத்தத்தையும், கொழுப்புச் சத்துக்காகக் கொழுப்பு பகுதிகளையும் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் கணிசமான மக்கள் பசுக்களைத் தெய்வமாகக் கருதுகிறார்கள். அவர்கள் இதை ஏற்க மாட்டார்கள். மேலும், சைவ உணவு உண்போரும் கூட இந்தப் பாலை ஏற்க மறுப்பார்கள். இதுபோன்ற மத ரீதியான சிக்கல் நிறையே இருக்கிறது. இது மட்டுமின்றி பொருளாதார அம்சங்களையும் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது...

இந்தியாவின் பால் மார்கெட்

பொதுவாகவே பால் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. சீஸுக்கு 30%, வெண்ணெய்க்கு 40% மற்றும் பால் பவுடருக்கு 60% வரி விதிக்கப்படுகிறது. இதனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பால் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வது லாபகரமானதாக இருக்காது.

இந்தியாவில் பால் நுகர்வு மட்டுமின்றி உற்பத்தியும் அதிகமாகவே உள்ளது. சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் இந்த துறையை நம்பி இருக்கிறார்கள். ஒருவேளை அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளித்தால் இந்தியப் பால் விவசாயிகள் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்.. அமெரிக்க நிறுவனங்கள் உள்ளே வரும் போது பால் விலை 15% வரை குறையலாம் என்றும் இதனால் பால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி இழப்பு ஏற்படலாம் என்றும் எஸ்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் இந்தியா திட்டவட்டமாக இருக்கிறது...