இனி மெரினா மட்டுமல்ல.. திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி பீச்களும் ஃப்ளூ ஃப்ளாக் கடற்கரையாகிறது!..

இனி மெரினா மட்டுமல்ல.. திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி பீச்களும் ஃப்ளூ ஃப்ளாக் கடற்கரையாகிறது!..
சென்னை: சென்னை மாநகராட்சி திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி மற்றும் மெரினா கடற்கரையை நீலக்கொடி கடற்கரைகளாக மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது..

நீச்சல் குளம் அருகே உள்ள மெரினா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்றும் பணி ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. புதிய வசதிகள் இந்த மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படும். இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மற்ற கடற்கரைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த இது ஊக்கமளித்துள்ளது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....

இந்த திட்டம் ஒவ்வொரு கடற்கரையிலும் 10-20 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும். கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) விதிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு நிலையான கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை பயன்படுத்துதல் (TN-SHORE) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை ஆகியவை இந்த திட்டத்திற்கான பகுதியை தேர்ந்தெடுக்கும்..

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை நீச்சல் குளத்தை சுற்றி 30 ஏக்கர் பரப்பளவில் 40 மூங்கில் இருக்கைகள், 20 குடைகள், நான்கு கண்காணிப்பு கோபுரங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய நான்கு குழந்தைகள் விளையாட்டு பகுதிகள், இரண்டு செல்ஃபி புள்ளிகள், கண்காணிப்புக்காக 20 கேமராக்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் 24 ஜோடி மூங்கில் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட பல வசதிகளை மாநகராட்சி ஏற்கனவே உருவாக்கியுள்ளது. மேலும் 40 அடி அகலம் மற்றும் 30 அடி உயரம் கொண்ட மூங்கில் வளைவு, தியான இடம் (30 அடிx30 அடி) மற்றும் வாசிப்பு இடம் (16 அடிx16 அடி), 30 சக்கர நாற்காலிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.....

இதற்கிடையில், நான்கு கடற்கரைகளிலும் மொத்தம் ரூ.24.80 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி டெண்டர் விட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ப்ளூ ஃபிளாக் (Blue Flag) எனப்படும் நீலக்கொடி கடற்கரைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த வாரம் இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

மெரினா நீலக்கொடி கடற்கரை: துணை முதல்வர் திறந்து வைக்க திட்டம்

சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீலக்கொடி கடற்கரையை, இன்னும் சில வாரங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீலக்கொடி கடற்கரை வளாகத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மரக்கன்றுகள் நடப்பட்டு, விளையாட்டு பகுதி நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்...

தற்போது, மூங்கில் சாய்வு நாற்காலிகள், குப்பைத் தொட்டிகள் அமைக்கும் பணி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி மற்றும் தியானத்திற்கான மூங்கில் தளம் அமைக்கும் பணி போன்ற இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) கட்டுமானப் பணிகளை முடித்து, அடுத்தகட்டமாக தண்ணீர் பரிசோதனையை முடித்து வரைபடங்களுடன் கூடிய தகவல் பலகைகளை அமைத்து வருகிறது. இந்த கடற்கரையை பராமரிக்கும் ஒப்பந்தம் ₹6 கோடிக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதி நீலக்கொடி மண்டலமாக மாற்றப்படவுள்ளது. இங்கு சாய்ந்த நாற்காலிகள், சிற்றுண்டிச்சாலை, உடற்பயிற்சி உபகரணங்கள், கண்காணிப்பு அமைப்பு மற்றும் நவீன நடைபாதைகள் போன்ற வசதிகள் ₹6 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளன. வணிகர்கள் இங்கு கடைகள் அமைக்க அனுமதி இல்லை. மெரினா கடற்கரை முழுவதும் இதேபோன்று படிப்படியாக மறுசீரமைக்க GCC திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் மே மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது...

ப்ளூ ஃபிளாக் சான்றிதழ்: மெரினாவுக்கு கிடைக்கும் அங்கீகாரம்

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரை, ப்ளூ ஃபிளாக் எனப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் சான்றிதழை பெற உள்ளது. இந்த சான்றிதழை பெறுவதற்கான டெண்டர் கிரேட்டர் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. ப்ளூ ஃபிளாக் சான்றிதழ் என்பது தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் தரம் போன்ற சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது....