ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகிப்பதை நிறுத்த உத்தரவா? மத்திய அரசு விளக்கம்..

புதுடெல்லி,
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் நமது நாட்டில் ரூபாய் நோட்டுகளில் உச்ச மதிப்புடைய ரூ.500-ஐ புழக்கத்தில் இருந்து படிப்படியாக திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், ''வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பின்னர் வங்கிகள் தங்களது 75 சதவீத ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகிப்பதை நிறுத்தவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி, ரூ.500 வினியோகிக்கப்படாத ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை 90 சதவீதம் ஆக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.200 மற்றும் ரூ.100 மட்டும் வினியோகிக்கப்பட இருக்கிறது. எனவே கையில் வைத்திருக்கும் ரூ.500 நோட்டுகளை இப்போது இருந்தே பணமாக்கிக்கொள்ளுங்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் 'வாட்ஸ் அப்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்த தகவல் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி இதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்'' என்று கூறப்பட்டுள்ளது...