வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் என்பது, வருமான வரி செலுத்துவோருக்கான பரபரப்பான மாதமாக இருக்கும். ஏனென்றால், ஜூலை 31ஆம் வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான கடைசி தேதியாக இருக்கும்.

ஆனால் 2024-2025 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து, கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது வருமான வரித்துறை.

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதைப் பதிவேற்றம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யாமல் இருப்பது

"வருமான வரி என்பது ஒரு நிதியாண்டில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ஈட்டிய வருமானத்தின் மீது மத்திய அரசால் விதிக்கப்படும் நேரடி வரியாகும். இந்திய வருமான வரிச் சட்டம் 1961இன்படி, எந்தெந்த வருமானங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன" என்று கூறிய ரேணுகா முரளி அவற்றைப் பட்டியலிட்டார்.

சம்பள வருமானம்: வேலைவாய்ப்பின் ஒரு பகுதியாகப் பெறப்படும் ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள்.

வீட்டுச் சொத்தில் இருந்து வருமானம்: நமக்குச் சொந்தமான வீடுகள் அல்லது சொத்துகளை வாடகைக்கு விடுவதன் மூலம் வரும் வருவாய்

வணிகம் அல்லது தொழில் இருந்து கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயங்கள்: வணிக உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் ஈட்டும் வருமானம் அல்லது நிகர லாபம்

அசையும்/அசையா சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபங்கள் (Capital Gain). இது குறுகிய கால மற்றும் நீண்ட கால ஆதாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

பிற மூலங்களில் இருந்து கிடைக்கும் வருமானம்: வட்டி, ஈவுத் தொகை (Divident) மற்றும் மேற்கூறிய வகைகளின் கீழ் வராத அனைத்து வகையான வருவாய்.

வரி விகிதம் என்பது ஒரு நிதியாண்டில் வரி செலுத்துவோர் மத்திய அரசுக்கு வரியாகச் செலுத்தும் வருமானத்தின் சதவிகிதத்தைக் குறிக்கிறது. வரி விகிதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் மத்திய அரசின் வருமான வரித்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

வருமான வரி தாக்கல் செய்வதற்கு என 7 விண்ணப்பங்கள் உள்ளன. வருமான வரித்துறையின் இணையதளத்தில் அவை கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் தங்களுக்கு ஏற்ற வகையைத் தேர்வு செய்து, அந்தப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம் அல்லது பதிவிறக்கம் செய்து, விவரங்களைப் பூர்த்தி செய்து மீண்டும் பதிவேற்றலாம்.

"வருமான வரி தாக்கல் செய்வது மிகவும் அவசியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு என்பதைத் தாண்டி தனிமனிதர்களுக்கும் இது முக்கியம். உதாரணத்திற்கு ஒரு வெளிநாட்டிற்குச் செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, வருமான வரி தாக்கல் செய்திருக்கிறீர்களா என்பது கணக்கில் கொள்ளப்படும்" என்கிறார் ரேணுகா முரளி.

சாமானியர்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இது தெரியாமல் நடக்கும் தவறாக இருக்கும். உதாரணத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு வரி கிடையாது எனப் பலரும் நினைக்கிறார்கள். 10,000 ரூபாயை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள், அதில் ஓர் ஆண்டுக்கு 10 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அந்த 10%, அதாவது 1000 ரூபாய் வருமானத்திற்கும் வரி உண்டு" என்கிறார் ரேணுகா முரளி.

தொடர்ந்து பேசிய அவர், "அதை நீங்கள் பணமாக வெளியே எடுக்காமல், வேறு ஏதாவது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தாலும் வரி உண்டு. அதேபோல, வைப்புத் தொகைகளுக்கும் வங்கி தரப்பில் இருந்து டிடிஎஸ் பிடிக்கப்பட்டு இருக்கும். ஆனால், அதைக் குறிப்பிடாமல் விட்டிருப்பார்கள். இது போன்றவற்றில், வருமான வரித்துறையிடம் இருந்து 'நோட்டீஸ்' வர வாய்ப்புள்ளது. எனவே அனைத்து வகையான வருமானங்களையும் தெளிவாகக் குறிப்பிடுவது அவசியம்" என்கிறார்.

ஒருவரின் வருமான வரித் தாக்கலில் குறைகள் கண்டறியப்பட்டால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(9) இன் கீழ் வருமான வரித் துறை உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பும்.

அதற்குப் பதிலளிக்க மற்றொரு நபரை (ஒரு பட்டயக் கணக்காளர்) நீங்கள் அங்கீகரிக்கலாம் அல்லது நீங்களே செய்யலாம். படிவத்தில் உள்ள தவறை ஆன்லைனில் சரிசெய்வதன் மூலம் 'நோட்டீஸ்'-க்கான பதிலைச் சமர்ப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் 15 நாட்கள். இருப்பினும், கூடுதல் கால அவகாசத்திற்கான கோரிக்கையும் ஏற்கப்படும்.

ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் 'நோட்டீஸ்'-க்கு நீங்கள் பதிலளிக்கத் தவறினால், உங்கள் வருமானம் செல்லாததாகக் கருதப்படலாம். எனவே வருமான வரிச் சட்டத்தின்படி, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அது வழிவகுக்கும்.

வங்கிக் கணக்குகள் அனைத்திலும் ஆதார், பான் விவரங்கள் இணைக்கப்பட்டு இருப்பதைக் குறிப்பிடும் ரேணுகா, "நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது, உங்கள் சொத்துகளும் ஆண்டு வருமானமும் சரிபார்க்கப்படும். அதில் ஏதேனும் பிரச்னை என்றால், நோட்டீஸ் தொடங்கி, பல்வேறு சட்டச் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்" என்கிறார்.