குடும்ப அட்டையில் ஒரே நாளில் முகவரி மாற வேண்டுமா?

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் ரேஷன் அட்டைகளுக்கு முகவரி மாற்றம் செய்ய மனு அளிப்பவர்களுக்கு ஒரே நாளில் மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' என்னும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்த முகாம்கள் வரும் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெற போகிறது. இதில் பல்வேறு சேவைகளை அரசு தர உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு தொடர்பான பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் எனில் அரசு அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் அரசு மாதம் மாதம் ஒரு நாளில் முகாம் அமைக்கிறது. அந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள். அந்த முகாமில் எளிதில் தீர்வு காணக்கூடிய பிரச்சனைகளுக்கு அன்றே தீர்வு கிடைக்கும். மற்ற விவகாரங்களுக்கு ஒரு வாரம் முதல் அதிகபட்சம் 45 நாளுக்குள் தீர்வு கிடைக்கும். அதேபோன்ற ஒரு முகாம்களைத்தான் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற முகாம்களை அரசு நடத்துகிறது.இந்த முறை வழக்கமான சேவைகளுடன் மகளிர் உரிமை தொகைக்கும் விண்ணப்பிக்க முடியும். அதேபோல் சில சேவைகளை உடனே பெற வழிவகையும் செய்யப்பட்டுள்ளது
ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "'உங்களுடன் ஸ்டாலின்' என்னும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார்
.சோதனை முறை
இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு முதியோர், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லம் தேடி ரேஷன் பொருட்களைக் கொண்டு செல்லும் திட்டத்தை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் வருகிற ஆகஸ்டு 8-ந்தேதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்
ஏற்கனவே கடந்த 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பரீட்சாத்த முறையில் 10 மாவட்டங்களில் இத்தகைய இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தை பரிச்சாத்த முறையில் செயல்படுத்தியதில் பல்வேறு சிக்கல்களை உணவு வழங்கல்துறை ஊழியர்கள் சந்தித்துள்ளனர். அதாவது பெரும்பாலானோர் முகவரி மாற்றம் மற்றும் தங்கள் குழந்தைகளுடன் வசிப்பதால் அவர்களுக்கான ரேஷன் பொருட்களை வீடு தேடி கொடுக்க இயலவில்லை.
முகவரி மாற்றுவது இல்லை
இன்னொரு புறம் தற்போது எந்த பகுதியில் உள்ள ரேஷன் அட்டையும் எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருப்பதால் பெரும்பாலானோர் தாங்கள் முகவரி மாறி சென்றாலும் ரேஷன் அட்டைகளில் முகவரி மாற்றம் செய்யாமல் அப்படியே ரேஷன் கடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் முகவரி மாற்றலாம்
இதனால் ரேஷன் அட்டைகளில் உள்ள பெரும்பாலான முகவரிகளில் நுகர்வோர்கள் இருப்பதில்லை. எனவே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் ரேஷன் அட்டைகளுக்கு முகவரி மாற்றம் செய்ய கோருபவர்களுக்கு ஒரே நாளில் முகவரி மாற்றம் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். நவம்பர் 30-ந்தேதி வரை நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் ரேஷன் அட்டைகளுக்கு முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் விண்ணப்பித்து ஒரே நாளில் பயனடையலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.