தமிழ், கன்னடம் கற்க தகுதியற்றவை"... X பதிவால் வெடித்த மொழிப் பிரச்னை! கடும் எதிர்ப்பு

தமிழ், கன்னடம் கற்க தகுதியற்றவை"... X பதிவால் வெடித்த மொழிப் பிரச்னை! கடும் எதிர்ப்பு
தமிழ், கன்னடம் கற்கத் தகுதியற்றவை"... X பதிவால் வெடித்த மொழிப் பிரச்னை! கடும் எதிர்ப்பு

இந்திய வட்டார மொழிகளான தமிழ் மற்றும் கன்னடத்தை இழிவுபடுத்தி வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவைக் கண்டித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து உள்ளனர். இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாச்சார மதிப்புகளை இழிவுபடுத்துவதாகக் கூறி, பரவலான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், இந்திய வட்டார மொழிகளான கன்னடம், தமிழ் மொழிகள் கற்றுக்கொள்வதற்குத் தகுதியற்றவை என்றும், அவை "ஏழ்மையான பொருளாதாரங்கள்" மற்றும் "மோசமான வாழ்க்கைத் தரம்" ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கருத்து தென் மாநிலங்களான பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பயனர் தனது X பதிவில், "நான் ஜப்பானுக்கு சென்றால் ஜப்பானிய மொழி கற்றிருப்பேன். சீனாவுக்கு சென்றால் சீன மொழி கற்றிருப்பேன். ஆனால் பெங்களூருவுக்கு சென்றால் ஆங்கிலம் பேசவே விரும்புவேன். சென்னைக்குச் சென்றால் ஆங்கிலம் பேசவே விரும்புவேன். ஏழ்மையான பொருளாதாரங்கள் மற்றும் மோசமான வாழ்க்கைத்தரம் கொண்ட மொழிகளைக் கற்றுக்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்

மேலும், வட்டார மொழிகள் குறித்த விவாதங்கள் தேவையற்றவை என்றும், புலம்பெயர்ந்தோர் மொழி அடிப்படையிலான துன்புறுத்தலைத் தவிர்க்க, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்களில் முதலீடுகளை சிறுதொழில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வாதிட்டிருந்தார். இந்த பதிவு, இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார மதிப்புகளை இழிவுபடுத்துவதாகக் கூறி, பரவலான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

தென் மாநிலங்களில் கொந்தளிப்பு:

பணக்கார நாடுகளின் மொழிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய மொழிகள் கற்றுக்கொள்வதற்கு குறைந்த தகுதி கொண்டவை என்ற இந்த கூற்று, சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பைப் பெற்றது. பல பயனர்கள் இந்த கருத்தை வன்மையாகக் கண்டித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர், "நீங்கள் நீண்ட காலம் ஒரு மாநிலத்தில் தங்கியிருந்தால், அந்த மாநில மொழியை மதிப்பதும், கற்றுக்கொள்வதும், பயன்படுத்துவதும் கட்டாயம். நீங்கள் ஒரு பார்வையாளராகவோ (அ) குறுகிய காலத்திற்கோ இருந்தால், ஆங்கிலத்தில் சமாளித்துக் கொள்ளுங்கள். இந்தி/உருது எதுவுமில்லை. கற்றுக்கொள் அல்லது புறப்படு என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பயனர், "நாகரீகமாக நடந்துகொள்ளும், உள்ளூர் மொழிகளைக் கற்றுக்கொண்டு மதிக்கும் நபர்கள் போதுமான அளவில் உள்ளனர். வெளிநாட்டினரும் கூட சரளமாகவும் பெருமையுடனும் அதைக் செய்கிறார்கள்" என்று சுட்டிக்காட்டினார்.