தவெக-வை திமுக கூட்டணிக்கு நாங்கள் அழைக்கவே இல்லை’ – கே.என். நேரு

தவெக-வை திமுக கூட்டணிக்கு நாங்கள் அழைக்கவே இல்லை’ – கே.என். நேரு

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்தாலும் வெற்றி பெறப் போவது நாங்கள் தான். அவரால் வெற்றி பெற முடியாது தமிழக வெற்றிக் கழகத்தை நாங்கள் கூட்டணிக்கு அழைக்கவே இல்லை” என்று நெல்லையில் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தி ரைஸ் அனைத்துலக தமிழ் எழுமின் தொழிலதிபர்கள் கூட்டமைப்பு, கிவ் லைஃப் ஆகிய தனியார் நிறுவனங்கள், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒவ்வொரு கட்சியினரும் அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால், திமுகவை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. திமுக கூட்டணிதான் வலுவாக உள்ளது, அதிமுகவின் கூட்டணி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா என்பதே அவர்கள்(அதிமுக) கூட்டணியில் பெரும் பிரச்னையாக உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரச்னையில் உள்ளன. திமுக தலைவர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். திமுக களத்தில் உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் திமுகவை நீக்குவோம் எனச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்” என்று கூறினார்.

மேலும், அதிமுக-பாஜக கூட்டணி சரியாக இல்லை என்று கூறிய அவர், எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டாலும், அவர் வெற்றி பெறப் போவதில்லை என்றார்.

அதோடு, தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒருபோதும் திமுகவுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “தமிழக வெற்றிக் கழகத்தை திமுக கூட்டணிக்கு நாங்கள் அழைக்கவே இல்லை” என்று தெரிவித்தார்.