கணக்கில் தொடக்க இருப்பு வெறும் ரூ.500... கிரெடிட் ஆனது ரூ.3.72 கோடி; டெபிட் ஆகியது ரூ.3.33 கோடி: ஒரே நாளில் நடந்த சம்பவம்; கவனிக்காத வங்கி

டெல்லியின் திரிலோக்புரி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்த "ஜீவிகா ஃபவுண்டேஷன்" என்ற பெயர்ப் பலகை, இன்று பெரும் மோசடியின் குறியீடாக மாறி நிற்கிறது. இந்தப் பலகையை யார் வைத்தது? யார் எடுத்தது என அக்கம்பக்கத்தினருக்குத் தெரியவில்லை. நீண்ட நாட்களாகப் பூட்டிக்கிடந்த இந்தக் குடியிருப்புடன் தொடர்புடைய இந்த அமைப்பு, சைபர் மோசடியாளர்கள் பல கோடி ரூபாய் திருடிய பணத்தை, வங்கிகளின் கண்களுக்குத் தெரியாமல் கடத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில், மோசடியாளர்கள் போலி நிறுவனங்களின் பெயரில் "கோஸ்ட் கணக்குகளை" (ghost accounts) உருவாக்கி, அதன் மூலம் பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளனர். குறிப்பாக, 2023 அக்டோபரில் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கியில் "ஜீவிகா ஃபவுண்டேஷன்" பெயரில் ஒரு அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகள், கணக்கு தொடங்கும் போது கேஒய்சி (KYC) விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அந்தக் கணக்கு மூலம் பெரும் தொகை மாற்றப்பட்டபோது, எந்தவித எச்சரிக்கையும் (red flags) ஏன் எழுப்பப்படவில்லை என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை. காவல்துறை விசாரித்த பின்னரே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது வங்கிகள் பணப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கத் தவறியதன் தெளிவான உதாரணமாக உள்ளது.
டெல்லியின் திரிலோக்புரியில் உள்ள "ஜீவிகா ஃபவுண்டேஷன்" என்ற பெயரில் இயங்கிய போலி அமைப்பின் வங்கி அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 8, 2024 அன்று, ஒரே நாளில் இந்த கணக்கில் 1,960 பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அன்றைய தினத்தின் தொடக்க இருப்பு வெறும் ரூ.556 மட்டுமே. ஆனால், ரூ.3.72 கோடி வரவும், ரூ.3.33 கோடி செலவும் செய்யப்பட்டுள்ளன.