காட்பாடியில் நாய் கறி? திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்.. ஆனால் விஷயமே வேற!!!

காட்பாடியில் நாய் கறி? திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்.. ஆனால் விஷயமே வேற!!!
நாய் கறி குறித்து அடிக்கடி வதந்திகள்....

வேலூர்: நாய் கறி குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்படுவது வழக்கமான ஒன்றுதான். வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியா தளங்களில் இதுபோன்ற வதந்திகள் அடிக்கடி பரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடியில் நாய் கறி விற்பனை செய்வதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்..

வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையை சேர்ந்தவர் வடிவேலு. இவர் ஒரு சமூக ஆர்வலர். அடிபட்டு கிடக்கும் தெரு நாய்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, உணவளிப்பது, கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருத்தடை செய்வது என பொதுச்சேவை செய்து வருகிறார்..

சில மாதங்களுக்கு முன்னர் இவர் சலவன்பேட்டையிலிருந்து இடம்பெயர்ந்து, காட்பாடி காந்திநகர் பகுதியில் தனது சகோதரனுடன் வசித்து வருகிறார். இங்கும் இதே சேவையை செய்து வந்திருக்கிறார். இதற்காக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து நாய்களை பராமரித்து வருகிறார். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் இங்கு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக உரிய அனுமதியையும் பெற்றிருக்கிறார். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது...

ஆனால் சிலர், இவர் நாய்களை அடைத்து வைத்து அதை வெட்டி கறியாக மாற்றி விற்பனை செய்வதாக புகார் அளித்தனர். இவர் நடத்தி வரும் பராமரிப்பு மையத்தில் 25 நாய்கள் இருக்கின்றன. இவ்வளவு அதிகமான நாய்கள் ஒரே இடத்தில் இருப்பதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் நாய் கறி விற்கிறார் என்று கூறி, இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாய் கறி விற்பனை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் நாய் கறி விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள காட்பாடி தாசில்தார், பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு மற்றும் கால்நடை அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொள்வார்கள்...

வழக்கமான நாய் கறி குறித்த வதந்திகள் இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் அசைவ உணவு பிரியர்களை குறிவைத்து பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அது உண்மையும் கூட. நாய் கறி குறித்து வதந்திகள் பரப்பப்படும்போதெல்லாம் அந்த பகுதியில் பிரியாணி போன்ற அசைவ உணவு விற்பனைகள் வெகுவாக குறைகின்றன என்று விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். எனவே இனியாவது இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று அசைவ பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதே சமயம் நாய்களுக்கான பராமரிப்பு மையம் நடத்தப்படுகிறது எனில் அதற்கான உரிய அறிவிப்பு பலகை வைத்து, அந்த இடத்தை தூய்மையாகவும், அங்கு பராமரிக்கப்படும் நாய்களால் அக்கம் பக்கத்தினருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது....