சென்னை தி.நகரில் ரூ.254 கோடியில் 5 மாடிகளுடன் பிரமாண்ட புதிய பஸ் நிலையம்..

சென்னை.
கோடம்பாக்கம், தி.நகர், அரும்பாக்கம் மற்றும் தி. நகர் பஸ் வழித்தடங்களுக்கு புதிய பஸ் நிலையம் ஒரு முக்கிய மையமாக திகழும்.
பல்வேறு வசதிகள் செய்யப்படுவதால் 5 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட பஸ் முனையமாக விரைவில் செயல்பட தொடங்கும்.
சென்னை மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் ஒன்று தி.நகராகும். பல்வேறு ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள் என தி.நகரில் ஏராளமான தொழில் சார்ந்த கடைகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதன் காரணமாக மாம்பலம் பகுதிக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.
ஆனால் அங்கு பயணிகளுக்கும் மாநகரப் போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளன.
பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் பஸ் நிலையத்துக்கு வெளியேயும் மாநகரப் பஸ்களை நிறுத்த வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்து வருகிறது.
இதனை குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு சிறந்த வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தி.நகரில் ஒரு புதிய ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்து அதன் பிறகு பணிகளை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய பஸ் முனையம் சுமார் 1.97 ஏக்கர் பரப்பளவில், ரூ.254 கோடியில் தி.நகரில் உள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய பணிமனையிலேயே அமைக்கப்பட உள்ளது. விசாலமாக கட்டப்பட உள்ள புதிய பஸ் நிலையத்தில் 97 பஸ்கள் மற்றும் 235 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இட வசதி செய்து கொடுக்கப்பட இருக்கிறது.
இது தவிர, தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மினி பஸ்களையும் கையாளும் திறன் கொண்டதாக இந்த புதிய பஸ் நிலையம் செயல்பட இருப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
கோடம்பாக்கம், தி.நகர், அரும்பாக்கம் மற்றும் தி. நகர் பஸ் வழித்தடங்களுக்கு புதிய பஸ் நிலையம் ஒரு முக்கிய மையமாக திகழும். பல்வேறு வசதிகள் செய்யப்படுவதால் 5 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட பஸ் முனையமாக விரைவில் செயல்பட தொடங்கும்.
தரைத்தளத்தில் பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேல் தளங்களில் கடைகள், அலுவலகங்கள், மருத்துவ மையங்கள், உணவகங்கள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், காத்திருப்பு பகுதிகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்படுகிறது. ஒரு தளத்தில் 50,471 சதுர அடியில் வாகன நிறுத்துமிடமும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த முனையத்தில் 75 பஸ்களுக்கான நிறுத்தம் மற்றும் 9 அடுக்குகள் கொண்ட 945 நான்கு சக்கர வாகன நிறுத்தம் மற்றும் 1.09 ஏக்கரில் 60 அடுக்குகள் கொண்ட 87 இருசக்கர வாகன நிறுத்தம் ஆகியவையும் இருக்கும்.
தற்போது தி.நகரில் 60-க்கும் மேற்பட்ட பஸ் வழித்தடங்கள் உள்ளதால், இங்குள்ள பஸ் முனையங்கள் மற்றும் சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. புதிய முனையம் அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முனையத்தில் வாகன நிறுத்தம், டிக்கெட் கவுண்டர்கள், தகவல் மையங்கள், பயணிகள் காத்திருப்புப் பகுதிகள், உணவகங்கள், மருத்துவ மையங்கள், மருந்தகங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளும் ஒரே இடத்தில் ஏற்படுத்தப்படுவதால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இந்த மையம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.
புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு வணிகம் மற்றும் பார்க்கிங் வருவாய் மூலம் ஐந்து ஆண்டுகளில் ரூ.29.52 கோடி வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பஸ் நிலையம் மூலம் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், வணிக ரீதியாகவும் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய முனையம் இந்த நெரிசலை முழுமையாக சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து கழக ஊழியர்கள் நீண்ட நேரம் பணிபுரிவது ஒரு சவாலாக உள்ளது. புதிய முனையம் இது போன்ற பிரச்சனைகளை குறைப்பதுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பயன் அடைவார்கள் என்பதும் அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.
இதை தொடர்ந்து புதிய முனையம் அமைக்கும் முடிவை அவர்கள் வரவேற்றுள்ளனர். இது தங்களுக்கு சிறந்த ஓய்வு மற்றும் பணிச்சூழலை வழங்கும் என நம்புகிறார்கள்.
இந்த புதிய திட்டம் தி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, சென்னை மாநகர வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.